சென்னை: உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான 4 நோயியல் பரிசோதனையக சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் ஒத்துழைப்போடு ஒரு வாக்கத்தான் நிகழ்வை நடத்தியது. “சுயநோயறிதல் சோதனையை தவிர்ப்போம்” என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வாக்கத்தான் நிகழ்வில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் – ன் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட, பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றனர். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாகவே நோயறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஆபத்துகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவண்ணம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தீங்கு விளைவிக்க வாய்ப்பிருக்கின்ற சுய நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக உரிய ஆலோசனையைப் பெற ஒரு மருத்துவரை சந்திப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸின் இந்த செயல்முயற்சிக்கான குறிக்கோள் இலக்காக இருந்தது.

வாக்கத்தான் நிகழ்வை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜிஎஸ்கே. வேலு, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் 2022-ம் ஆண்டுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டாக்டர். T.செந்தமிழ் பாரி மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் வடமண்டலத்திற்கான துணைத் தலைவர் டாக்டர். வி. சரவணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.