விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்
சென்னை, 29 மே 2022: மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை இன்று முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யேகமாக தொடங்கியுள்ளது. இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும். இப்பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் வி.எஸ். குழும மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவருகிறது. முதிவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களை தீர்க்கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது முதியாருக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ். நடராஜன் தலைமையில் செயல்படும். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான முதியோருக்கு அனைத்து வகையான தீர்வுகளை ஒருங்கிணைந்த வகையில் அளிக்கும் மையமாக இது திகழும் என்றார்.
முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவை சுதந்திர போராட்ட வீரர் திரு லட்சுமி காந்தன் பாரதி ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் வி.எஸ். மருத்துவமனையின் முதியோருக்கான புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜகதீஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலையில் பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் வி.எஸ். நடராஜன் திறந்து வைத்தார். விழாவில் பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன், பேராசிரியர் டாக்டர் எஸ். சுந்தர், இணைப்பு மாற்று மற்றும் கட்டி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ இயக்குநர், விஎஸ் குழும மருத்துவமனை மற்றும் திரு முத்து சுப்ரமணியன், செயல் இயக்குநர், விஎஸ் குழும மருத்துவமனை ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜகதீஷ் சந்திர போஸ், “புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் இரண்டாவது இடத்திலும் முதியோருக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் நான்காவது இடத்திலும் உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்போர் விகிதம் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதில் ஏற்படும் தேக்க நிலை அதிலும் தீவிரமாக பாதிக்கும் புற்றுநோயைக் கண்டறியாமல் விடுவதும் இதற்குக் காரணமாகும். தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் 2020 அடிப்படையில் பார்த்தோமானால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் விகிதம் அடுத்த 5 ஆண்டுகளில் 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். சுமார் 15 லட்சம் பேர் 2025-ம் ஆண்டில் இத்தகைய தொற்று அல்லாத நோயால் பாதிக்கப்படுவர் என புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. நமது உணவு பழக்கம், நகர்ப்புற சுற்றுச் சூழல் பாதிப்பு, உடல் பருமன், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவை அதிகரிப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்,’’ என்று குறிப்பிட்டார்.
மூத்த முதியோர் மருத்துவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் பேசியதாவது: “புற்றுநோய் பாதித்த முதியவர்களைக் கையாள்வது என்பது மிகவும் சவாலானது. இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிற நோய் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாவர். மேலும் பிற உடல் சார்ந்த பிரச்சினைகளும் இவர்களுக்கு இருப்பதால் பல முனை மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இது தவிர சமூக, பொருளாதார மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் இவர்களுக்கு உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் பாதித்த முதியவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறை இருப்பதில்லை. அவருக்குள்ள கட்டியை கதிரியக்க சிகிச்சை மூலம் அகற்றிவிட முடியும். ஆனால் முதுமை காரணமாக அதை மேற்கொள்ள முடிவதில்லை. இத்தகையோருக்கு கீமோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பதால் பிற நோய்களின் தாக்கம் தீவிரமடைந்து உயிரிழப்புகள் தவிர்க்க முடியாமல் போய்விடும். புற்றுநோய் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் பெரும்பாலானவை முதியவர்களுக்கு சோதிக்கப்படாமலே உள்ளன. இதனாலேயே இத்தகைய புற்றுநோய் பாதித்த முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமானதாக உள்ளது’’ என்றார்.