சென்னை, டிசம்பர் 20, 2025: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் “அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ்” (Accord Tamil Nadu Dragons) அணியின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள ‘தி அக்கார்டு மெட்ரோபாலிட்டன்’ ஹோட்டலில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டுத்துறை ஜாம்பவான்கள் மற்றும் ஊடகத்துறையினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் ஹாக்கி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்த விழாவில், அணியின் உரிமையாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அணியின் அதிகாரப்பூர்வ சின்னம் (Logo) மற்றும் வீரர்கள் அணியும் புதிய சீருடை (Jersey) ஆகியவை வெளியிடப்பட்டன. இது, நடக்கவிருக்கும் ஹாக்கி திருவிழாவிற்கு ஒரு உற்சாகமான தொடக்கமாக அமைந்தது.
இவ்வணியின் உரிமையாளரும், பாரத் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த், கல்வி மற்றும் மருத்துவம் வாயிலாக, சமூக மேம்பாட்டிற்காக பல்லாண்டுகளாகப் பங்காற்றி வருகிறார். இவரது தலைமையின் கீழ், அக்கார்டு மற்றும் பாரத் குழுமங்கள் 6,000-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு முழுமையான இலவச கல்வி வழங்கி வருவதோடு, பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளையும் அளித்து சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே அர்ப்பணிப்புடன் தற்போது விளையாட்டுத் துறையிலும் இவர்கள் தடம் பதித்துள்ளனர்.
இவ்விழாவில், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் ‘வியூகம் மற்றும் திட்டமிடல்’ ஆலோசனைக் குழுவின் தலைவரும், அக்கார்டு குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தீப் ஆனந்த் J, ஹாக்கி இந்தியாவின் பொருளாளரும் தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் தலைவருமான திரு. சேகர் J. மனோகரன், அணியின் உதவி பயிற்சியாளர் திரு. விக்ரம் காந்த், அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி திரு. ஜோசப் மற்றும் அணியின் கேப்டன் திரு. அமித் ரோஹிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைத தொடருக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பே இந்த அணியை உருவாக்குவதற்கான முக்கிய உந்துதலாக அமைந்தது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர்களுக்கு, ஹாக்கி இந்தியா லீக் மூலம் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக, பாரத் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பிரத்யேக ஹாக்கி அகாடமி அமைப்பதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் துடிப்புமிக்க இளம் வீரர்கள் என மிகச்சரியான கலவையில் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சீசனில் மற்ற அணிகளுக்கு இது கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய ஹாக்கி தொடர்களில் ஒன்றான ஹாக்கி இந்தியா லீக், வீரர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஒரு உலகளாவிய மேடையாகும். தமிழ்நாட்டின் உணர்வையும் பெருமையையும் தாங்கி களமிறங்கும் ‘டிராகன்ஸ்’ அணிக்கு ரசிகர்கள், ஊடகத்துறையினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் பேராதரவு அளிக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
