KKR மருத்துவமனை 2002-ல் முன்னோடி அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்று நோயாளி உயிர் பிழைத்ததன் 22-ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

சென்னை: 28 மே 2024 – KKR ENT மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையளித்தல் மற்றும் குணமடைதல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது. 2002-ஆம் ஆண்டில், தொண்டைப் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்த நிலையில் கண்டறியப்பட்ட ஒரு நோயாளி 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் பிழைத்திருப்பது மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் ஆசிரியராக, பேசிக்கொண்டு, பணிபுரிந்துகொண்டு, ஒரு துடிப்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்.

2002-ஆம் ஆண்டில், அப்போது 27 வயதான திரு. போனடே தேஜேஸ்வர் ராவிற்கு, குரல்வளைக்குப் பின்னால் அமைந்துள்ள ஹைப்போஃபாரிங்க்ஸில் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. அவரது புற்றுநோயின் முற்றிய நிலை காரணமாக, ரேடியோதெரபி, கீமோதெரபி போன்ற பாரம்பரிய சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. டாக்டர் K.K. ராமலிங்கம், அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவுடன் இணைந்து, கேஸ்ட்ரிக் புல்-அப் உடன் டோட்டல் லாரிங்கோஃபாரிங்கோ-எசோஃபாஜெக்டமி எனப்படும் ஒரு செயல்முறையை மேற்கொண்டார். இது அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாகும்.

குரல்வளைக்குப் பின்னால் அமைந்துள்ள ஹைப்போஃபாரிங்க்ஸ், உணவுக்குழாய்க்கு உணவைக் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திரு. ராவின் புற்றுநோயின் பெரிதும் பரவியிருந்த தன்மையால் அவரது குரல்வளையை அகற்றி புதிய உணவுப் பாதையை உருவாக்க வேண்டியிருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை இரண்டு அறுவை சிகிச்சைக் குழுக்களைக் கொண்டிருந்தது: கழுத்து, மேல் மார்புக்கென ஒரு கழுத்து அறுவை சிகிச்சை குழு; மற்றும் அடிவயிறு, கீழ் மார்புக்கென அடிவயிற்று அறுவை சிகிச்சை குழு. இச்செயல்முறை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது.

டாக்டர் K.K. ராமலிங்கம் கழுத்து மற்றும் மேல் மார்பு அறுவை சிகிச்சைக்குத் தலைமை வகிக்க, தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கௌரி சங்கர், டாக்டர். ராஜன் செந்தேசோம், டாக்டர். ராஜா சுந்தரம், டாக்டர். ஜோசப் டிரைரும் ஆகியோர் அடிவயிற்றுப் பகுதிகளைக் கையாண்டனர். இந்தப் புதுமையான அணுகுமுறை விழுங்குதல் மற்றும் சுவாசம் ஆகிய இரண்டிற்கும் உதவும் வகையில் கழுத்துப் பகுதியில் செயல்படுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட வயிற்றைப் பயன்படுத்தியது.

குறிப்பிடத்தக்க வகையில், திரு. ராவ் அறுவைசிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து, வயிறு ஒலி உற்பத்திக்கு உதவும் பேச்சு முறையான, கேஸ்ட்ரிக் குரலை வலிமையாக வளர்த்துக்கொண்டார். அவர் தனது ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பி, மாணவர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது மீண்டெழும் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து உத்வேகமளித்தார். இத்தகைய மேம்பட்ட மற்றும் சிக்கலான புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் 22 ஆண்டுகளுக்கும் மேலாக, மிக அதிக காலம் உயிர் பிழைத்திருக்கும் அவரது வாழ்க்கை தனித்துவமாகத் திகழ்கிறது.

டாக்டர் K.K. ராமலிங்கம் தென்னிந்தியாவில் இந்த அறுவை சிகிச்சை நுட்பத்தை அறிமுகப்படுத்தியது இது போன்ற சந்தர்ப்பங்களில் பல வெற்றிகரமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. அவர் கூறுகிறார், “கேஸ்ட்ரிக் புல்-அப் முறையானது, மொத்த லாரிங்கோஃபாரிங்கோ-எசோஃபாஜெக்டோமிக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு ஒரு பொதுவான மற்றும் பயனுள்ள புனரமைப்பு தெரிவாக அமைந்து, இக்கடுமையான நோயறிதல் செயல்முறையை எதிர்கொள்ளும் பலருக்கும் நம்பிக்கையையும் தரமான வாழ்க்கையையும் வழங்குகிறது. இப்பயணம் முழுவதும் நம்பிக்கையும் தைரியமும் அளித்த திரு. ராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதுமை உருவாக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மறையான உத்வேகத்துடன், மிகவும் கடினமான மருத்துவ சவால்களைக் கூட நாம் வெற்றிகொள்ள முடியும் என்பதை நிரூபித்து, இதே போன்ற யுத்தங்களை எதிர்கொள்ளும் பலருக்கும் அவரது கதை நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.”

திரு. ராவின் நீடித்த வாழ்க்கையும் தற்போதும் தொடரும் வெற்றிக் கதையும் புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றங்களையும் புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது பேச்சு, கற்பித்தல் திறன், ஒரு காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுக்களின் மிகச் சிறப்பான திறமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாகும்.

Previous post Kauvery Hospital Launches Summer Internship Program for Psychology Students and Budding Psychologists
Next post Ultimate Table Tennis 2024: Eight Teams Set to Serve Up Excitement in Chennai, Starting 22nd August 2024